எபோலா வைரஸ் பரவல்... மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

 

ஆப்பிரிக்க நாடுகளில் அண்மைக் காலமாக அரிய வகை 'பண்டிபுகியோ' ரக எபோலா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. குறிப்பாக காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் 650-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 140-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக, இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுகாதாரப் பணிகள் பொது இயக்குநரகம் (DGHS), சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கான புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, எபோலா வைரஸ் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ள பின்வரும் ஆப்பிரிக்க நாடுகள் அதிதீவிர ஆபத்துள்ள நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (காங்கோ - DRC), உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து நேரடியாகவோ அல்லது பிற நாடுகள் வழியாகவோ இந்தியா வரும் பயணிகள் அனைவரும் விமான நிலையங்களில் தீவிர மருத்துவக் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்தியாவிற்குள் எபோலா வைரஸ் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமையில் மாநில அரசுகளுடன் நடத்தப்பட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன:

விமான நிறுவனங்கள் தங்களின் பயணிகளுக்கு விமானத்தினுள்ளேயே எபோலா சுயவிவரப் படிவங்களை வழங்கிட வேண்டும். பயணிகள் தங்களின் உடல்நிலை மற்றும் பயண விபரங்களை அதில் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும்.

காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, தசை வலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் காரணமில்லாத ரத்தப்போக்கு போன்ற எபோலாவுக்கான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், பயணிகள் குடியுரிமைத் துறையின் பரிசோதனைக்குச் செல்லும் முன்பாகவே விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் சுயவிருப்பத்தின் பேரில் தெரிவிக்க வேண்டும்.

21 நாட்கள் கண்காணிப்பு: எபோலா பாதிப்புள்ள நபர்களின் ரத்தம் அல்லது உடல் திரவங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவர்கள் தங்களை உடனே மருத்துவப் பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வந்த பயணிகள் இந்தியாவிற்குள் நுழைந்த 21 நாட்களுக்குள் எப்போது அறிகுறிகள் தென்பட்டாலும், உடனடியாகத் தங்கள் பயண வரலாற்றைக் கூறி மருத்துவ உதவியை நாட வேண்டும்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, இந்தியாவில் இதுவரை யாருக்கும் எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சிறப்புத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் அவசரக் கால ஆம்புலன்ஸ் வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என்றும், வெளிநாட்டுப் பயணிகள் அரசு அறிவித்துள்ள மருத்துவப் பரிசோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.