எபேலோ வைரஸ்  எதிரொலி ...   அமெரிக்கா செல்ல வேண்டிய விமானம் கனடாவுக்குத் திருப்பப்பட்ட அவலம்!  

 

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தற்பொழுது எபோலா வைரஸ் நோய் மிக அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலகிலேயே மிகக் கொடிய இந்த வைரஸ் தொற்றால் காங்கோவில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதால், அந்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் சாமானியப் பயணிகளுக்கு தற்பொழுது கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய விசா விதிகள் அதிரடியாக விதிக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின்படி, காங்கோ போன்ற உயர் ஆபத்து நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் பயணிகள் அனைவரும் வாஷிங்டன் சர்வதேச விமான நிலையம் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு இன்று புறப்பட்டுச் சென்ற ஏர் பிரான்ஸ் (Air France) நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றில், காங்கோ நாட்டைச் சேர்ந்த ஒரு பயணி இருந்துள்ளார்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தாலும் அவர் வாஷிங்டன் வழியாக வராததால், அந்த ஏர் பிரான்ஸ் விமானத்தை மிச்சிகன் விமான நிலையத்தில் தரையிறக்க அமெரிக்க அதிகாரிகள் திடீரென அனுமதி மறுத்தனர். இதன் காரணமாக நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த மெகா விமானம் உடனடியாக அண்டை நாடான கனடாவின் மாண்ட்ரியல் (Montreal) நகருக்கு அதிரடியாகத் திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது. அங்கு அந்த காங்கோ பயணியை மட்டும் தனியாக இறக்கி தீவிர மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பில் வைத்த பின்னர், ஏர் பிரான்ஸ் விமானம் பிற பயணிகளுடன் மிச்சிகனுக்குப் பத்திரமாகப் புறப்பட்டுச் சென்றது.