ஐதராபாத்தில் விமான பயணிகளுக்கு எபோலா அறிகுறி...  தீவிர கண்காணிப்பில் சக பயணிகள்! 

 

ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று அதிகாலை இரண்டு பேர் சிகிச்சைக்காகச் சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆரம்பக்கட்ட அறிகுறிகளின் அடிப்படையில் அவர்களுக்கு எபோலா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக உடனடியாக அங்குள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக நேற்று இதே போன்ற உடல்நலப் பாதிப்புகளுடன் மற்றொரு நபரும் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் அந்த மூன்று பேரும் சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஐதராபாத்திற்கு விமானம் மூலம் வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் அவசரமாக உஷார்படுத்தப்பட்டனர். அந்த மூன்று சந்தேக நபர்களுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளின் முழு விவரங்களையும் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். மேலும், அந்தப் பயணிகளில் யாருக்கேனும் இது போன்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் தீவிர கண்காணிப்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.