"ஆபரேஷன் எபிக் ஃபியூரி" எதிரொலி.. மருந்துகள் விலை 20% உயர்கிறது - இந்தியச் சந்தையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்தி வரும் 13 நாள் தொடர் தாக்குதலால், உலக வர்த்தகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் 'ஹார்முஸ் ஜலசந்தி' தற்போது மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் மருந்துப் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் விலை 10% முதல் 20% வரை உயரக்கூடும் என மருத்துவத் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மருந்து விலை உயர்வின் பின்னணியில் மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகின்றன. தற்போது இந்த வழித்தடம் முடங்கியுள்ளதால், சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் கப்பல் போக்குவரத்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
மருந்துத் தயாரிப்பிற்குத் தேவையான அடிப்படை மூலப்பொருட்கள் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்தே வருகின்றன. இவற்றின் விலை இப்போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால், மாத்திரைகளை பேக் செய்யப் பயன்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அட்டைகளின் விலையும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் உணவுப் பட்டியலில் உள்ள உணவுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முயன்றாலும், தட்டுப்பாடு இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
தற்போது கையிருப்பில் உள்ள மருந்துகள் பழைய விலையிலேயே விற்கப்படும். இருப்பினும், புதிய சரக்குகள் வரத் தொடங்கும் போது, அதாவது மார்ச் மாத இறுதிக்குள் புதிய விலை உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான மருந்துகளின் விலையில் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.