போர் நிறுத்தம் எதிரொலி... ஈரான் வான்வெளி 7 வாரங்களுக்குப் பின் திறப்பு - மீண்டும் பறக்கத் தொடங்கிய விமானங்கள்!

 

மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றம் தணிந்து வரும் நிலையில், ஈரான் அரசு தனது நாட்டு வான்வெளியைப் பகுதி அளவு திறந்துள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படையின் தாக்குதல் காரணமாகக் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த வான்வெளி, சுமார் ஏழு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு வாரத்தைக் கடந்த நிலையில், இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரானின் கிழக்கு வான்வழிப் பாதைகள் காலை 7 மணி முதல் திறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு உறுதி செய்துள்ளது. இதனால் ஈரானின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் படிப்படியாக இயக்கப்பட உள்ளன.

போர் காரணமாக ஈரானின் வான்வெளி மூடப்பட்டிருந்ததால், சர்வதேச விமான நிறுவனங்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி வந்தன. இது எரிபொருள் செலவு மற்றும் பயண நேரத்தை அதிகரித்திருந்தது. தற்போது வான்வெளி திறக்கப்பட்டுள்ளதால், சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் அரசு நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி, போர் மேகங்கள் விலகி அமைதி திரும்புவதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், பாதுகாப்பு கருதி வான்வெளி பகுதி அளவே திறக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையைக் கண்காணித்து முழுமையாகத் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.