புரட்டாசி மாதம் எதிரொலி... நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு!

 

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால், நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கான தேவை குறைந்து, பண்ணைக் கொள்முதல் விலையில் 20 காசுகள் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 20 நாட்களாக ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 ரூபாய் 60 காசுகளாகத் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 20 காசுகள் குறைந்து 5 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 13 நாட்களுக்குப் பிறகு முட்டை விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகப் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பவர்கள் பலர் இருப்பதால், முட்டைகளின் விற்பனை மற்றும் நுகர்வு சற்று குறைந்து சந்தையில் தேக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது விலை குறைந்துள்ளதாகப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.