பொருளாதார வீழ்ச்சி.. ஸ்தம்பித்தது பொலிவியா - ராணுவ அமைச்சர் உட்பட 3 அமைச்சர்கள் ராஜினாமா!

 

தென் அமெரிக்க நாடான பொலிவியா தற்போது தன் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியையும், கடுமையான மக்கள் கிளர்ச்சியையும் சந்தித்து வருகிறது.

நாட்டின் இந்தச் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்குலைவுக்குப் பொறுப்பேற்றும், அதிபரின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராணுவ அமைச்சர் உட்பட 3 முக்கிய கேபினட் அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். 

கடந்த சில மாதங்களாகவே பொலிவியா நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து, தற்பொழுது அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வழியின்றி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. நாட்டில் பணவீக்கம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், அன்றாட உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன.

வெளிநாட்டு வர்த்தகத்திற்கான அமெரிக்க டாலர் இருப்பு முற்றிலும் தீர்ந்து விட்டதால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்கிறோம் என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருள் மானியங்களை ரத்து செய்யும் புதிய கடுமையான பொருளாதாரக் கொள்கையை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த லட்சக்கணக்கான மக்கள் தற்போது அதிபருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் இந்தத் தொடர் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தைப் பயன்படுத்துவது மற்றும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அமைச்சரவைக்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் வெடித்தன. இதன் உச்சகட்டமாக இன்று மார்செலோ சலினாஸ் - ராணுவ அமைச்சர், பீட்ரிஸ் கார்சியா - கல்வித் துறை அமைச்சர், எட்கர் மொராலஸ் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எப்ன 3 முக்கிய அமைச்சர்கள் தங்களது பதவிகளைத் துறந்துள்ளனர்.

மக்களுக்கு எதிரான கொள்கைகளைத் தங்களால் ஆதரிக்க முடியாது என்றும், நாட்டின் தற்போதைய நிலைக்குத் தவறான பொருளாதாரத் திட்டமிடலே காரணம் என்றும் கூறி இவர்கள் மூவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை அதிபரிடம் சமர்ப்பித்துள்ளனர்.