தவெக அரசுக்கு எதிராக ஜூலை 18-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றதற்குப் பின், ஆளுங்கட்சிக்கு எதிராகத் தனது முதல் அரசியல் போராட்டத்தை எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்துள்ளது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து வரும் ஜூலை 18-ஆம் தேதி திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.  தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், தவெக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் போதிய அக்கறை செலுத்தாமல் முற்றிலும் தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்களின் புழக்கம் தடையின்றி அதிகரித்து வருவதையும், சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த அரசுத் தவறியுள்ளதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மையைப் பெறுவதற்காக மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தன்பக்கம் இழுக்கும் 'ஆபரேஷன் எல்' போன்ற குதிரைப் பேர அரசியலை ஆளுங்கட்சியான தவெக ஊக்குவித்து வருவதாக அதிமுக மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

சமீபத்தில் சேலம் மற்றும் சென்னை ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் தவெக நிர்வாகிகள் சிலர் மீது எழுந்துள்ள பாலியல் புகார்கள் மற்றும் கைது நடவடிக்கைகளைக் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே விமரிசித்திருந்த நிலையில், இந்த போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ-க்களைத் தவெக இழுத்து வருவதாகக் கூறப்படும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில், திருச்சியில் அமையவிருக்கும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தவெக மற்றும் அதிமுக இடையேயான அரசியல் மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.