முதல்வர் விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டும் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கவில்லை; அமைச்சர் நிர்மல்குமார்!

 

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் அதற்குப் பிந்தைய அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் விஜய் தரப்பிற்கு இடையே நடந்த ஒரு முக்கியச் சந்திப்பு முயற்சி குறித்துப் பேசினார்.

"தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தரப்பில் இருந்து, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக அதிகாரப்பூர்வமாக நேரம் கேட்கப்பட்டது உண்மைதான்" என்று உறுதிப்படுத்தினார்.

"ஆனால், முதல்வர் விஜய் தரப்பின் இந்த கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க தரப்பில் இருந்து எவ்வித சாதகமான பதிலும் கூறப்படவில்லை. விஜய் அவர்களைச் சந்திக்க இ.பி.எஸ் தரப்பு இறுதிவரை நேரம் ஒதுக்க முன்வரவில்லை" என்று அமைச்சர் நிர்மல்குமார் அதிரடியாகத் தெரிவித்தார்.

விஜய் தரப்பின் சந்திப்பு நிராகரிக்கப்பட்டதை அப்போது ஏன் கூறவில்லை என்பதற்கும் அமைச்சர் நிர்மல்குமார் தனது பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

"ஒருசில தலைவர்கள் தங்களது தற்போதைய சுய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, முதல்வர் விஜய்யைச் சந்திக்கும் வாய்ப்பை முற்றிலும் நிராகரித்தனர். அதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமியை விஜய் அவர்களால் சந்திக்க முடியாமல் போனது. இந்த விபரங்களை நாங்கள் அப்போது பொதுவெளியில் கூறவில்லை. ஆனால், தற்பொழுது பல்வேறு அரசியல் வதந்திகள் பரவி வருவதால், உண்மை நிலையை விளக்க வேண்டிய கட்டாயமான இடத்தில் நான் உள்ளேன். அதனால்தான் இந்த விபரத்தை இப்போது உங்களிடம் கூறுகிறேன்" என்றார்.