“70 படங்களில் நடிச்சும் ஒரு தேசிய விருது வாங்க முடியலை” - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழக முதல்வர் விஜயையும், தவெக ஆட்சியையும் கடுமையாகச் சாடி அவர் பேசிய முக்கியக் கருத்துகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சினிமா துறையில் சாதிக்காதவர்கள் அரசியலில் எப்படி சாதிக்க முடியும் என்றும், தவெக அரசு விபத்து போல ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் அவர் கடுமையான விமர்னங்களை முன்வைத்துள்ளார்.
கூட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியும் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைக்க முடியாதவர்கள் அரசியல் களத்தில் எப்படி வெற்றிபெற முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "எழுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் கூட இதுவரை ஒரு தேசிய விருதைக்கூட பெற முடியவில்லை. சினிமா துறையிலேயே உங்களால் தேர்ச்சி பெற முடியவில்லை, அங்கேயே பாஸ் பண்ண முடியவில்லை. அப்படியானால் இங்கு அரசியலிலா பாஸ் பண்ணப் போகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், கடந்த காலத்தில் வெளியான ஒரு சில படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்த சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். அந்தத் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக நேரில் சென்று ஆறுதல் கூறவோ அல்லது உதவிகளைச் செய்யவோ முற்படாமல், உடனடியாக விமானம் மூலம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக அவர் குற்றம்சாட்டினார். தவெகவின் கூட்டத்திற்கு வருகை தரும் சாதாரண பொதுமக்களையே அவர்களால் சரியாகப் பாதுகாக்க முடியவில்லை என்றால், ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவர்களால் எப்படிப் பாதுகாக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
தமது சொந்தத் தொகுதியான எடப்பாடி தொகுதியில் நூறு விஜய் வந்தாலும் எதையுமே சாதிக்க முடியாது என்று சவால் விடுத்தார். மேலும், முதலமைச்சர் கூறியது போல அவரது நேரடி உத்தரவின் பேரில் வீரமணி கைது செய்யப்படவில்லை என்றும், அரசியல் லாபத்திற்காகவே இது தொடர்பாகப் பொய் கூறப்படுவதாகவும் தெரிவித்தார். தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கடந்த தேர்தலின் போது விஜய் தீவிரமாகப் பிரசாரம் செய்த போதிலும், எடப்பாடி தொகுதியில் தம்மால்தான் வெற்றி பெற முடிந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டிக் கூறினார்.
தற்போதைய சட்டமன்றத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான அதிருப்தியை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, தற்போது சட்டமன்றம் ஒரு பட்டிமன்றம் போல மாறி விட்டதாகக் கிண்டல் செய்தார். தவெக கட்சி ஏதோ ஒரு தற்செயலான அரசியல் விபத்தில்தான் ஆட்சி அமைத்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசியல் சூழலில் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களைப் பிள்ளை பிடிப்பது போல விலைக்கு வாங்கும் குதிரை பேர அரசியலில் தவெகவினர் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் படம் ஒரு வாரம் கூட ஓடாத நிலையில், அவருக்கு டெல்லியின் சிறப்புப் பிரதிநிதி பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், இத்தகைய போக்கால் நாடும் மாநிலமும் எப்படி உருப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.