AI பயன்படுத்தும் நபர்களுக்கு கட்சி பதவி - எடப்பாடி பழனிசாமி அதிரடி!
அதிமுகவின் எதிர்கால வளர்ச்சி மற்றும் தேர்தல் வியூகங்களுக்கு இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும், சமூக ஊடகங்களில் திறம்படச் செயல்படும் நபர்களுக்குக் கட்சியில் முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அண்மைய அரசியல் மாற்றங்கள் குறித்து விவரித்தார். தவெகவினர் சமூக வலைதளங்களை மிக முழுமையாகவும், திட்டமிட்டபடியும் பயன்படுத்தியதன் மூலமே ஆட்சியைப் பிடித்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், நவீனத் தொழில்நுட்பத்தின் அவசியத்தை அதிமுகவினர் உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
கால மாற்றத்திற்கு ஏற்பக் கட்சியைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கட்சி நிர்வாகிகளுக்குப் புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளார். அதிமுகவின் சாதனைகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும், எதிர்க்கட்சிகளின் போலிப் பிரச்சாரங்களை முறியடிக்கவும் ஏஐ தொழில்நுட்பப் பயன்பாடுகள் இனி வரும் நாட்களில் அதிகரிக்கப்படும்.
வெறும் களப்பணியோடு நின்றுவிடாமல் டிஜிட்டல் தளங்களிலும் கட்சி வலுவாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் சுவாரஸ்யமாகவும் திறமையாகவும் கொண்டு சேர்க்கும் இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குக் கட்சியில் தகுதியான முக்கியப் பதவிகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியை அடிமட்ட அளவில் இருந்து முழுமையாக மாற்றி அமைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய உத்திகளுடன் செயல்பட எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தவெக, திமுக ஆகிய கட்சிகளுக்குப் போட்டியாக அதிமுகவும் டிஜிட்டல் அரசியலில் முழு வீச்சில் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.