"விஜய் வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்" – திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

 

"அதிமுகவில் இருப்பவர்கள் தற்போதாவது தங்களது தூக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும்" என்று திமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான சிவசங்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்த சிவசங்கர் எம்.எல்.ஏ., தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அதிமுகவின் தேர்தல் தோல்விகள் குறித்துப் பரபரப்பான விமர்சனங்களை முன்வைத்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில், "தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெற்றி பெற்றதற்குக் காரணமே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தேர்தல் களத்தில் விஜய்க்கு ஆதரவான ஒரு மறைமுகச் சூழலை அவரே உருவாக்கிக் கொடுத்தார். பொதுக்கூட்ட மேடைகளில் நின்று கொண்டு, 'பார்த்தீர்களா, அங்கே கூட்டத்தில் கொடி பறக்கிறது பாருங்கள்' என விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசியது தான், அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் பலரும் தேர்தலில் படுதோல்வி அடைவதற்குக் காரணியாக அமைந்தது."

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு அக்கட்சியின் தொண்டர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். "இனிவரும் காலங்களிலாவது அதிமுகவின் தலைமை விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும். தங்கள் கட்சியின் பலம் என்ன என்பதை உணர்ந்து செயல்படாவிட்டால் பின்னடைவைச் சந்திக்க நேரிடும்" என்று அறிவுறுத்தினார்.