பக்காவாக ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி... சென்னையில் பாஜகவுக்கு ஒரேயொரு தொகுதி ஒதுக்கீடு!

 

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலை வெளியிட்டார். இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரம் வருமாறு: ராசிபுரம் (தனி), பத்மநாபபுரம், குளச்சல், ராமநாதபுரம், மானாமதுரை (தனி), அறந்தாங்கி, திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஆவடி, விளவங்கோடு, நாகர்கோயில், ராதாபுரம், வாசுதேவநல்லூர் (தனி), திருச்செந்தூர், சாத்தூர், மதுரை தெற்கு, திருப்பத்தூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி), கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், அவிநாசி (தனி), உதகமண்டலம், மொடக்குறிச்சி, தளி மற்றும் மயிலாப்பூர்.

இதில் சென்னையில் மொத்தம் 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், பாஜகவிற்கு மயிலாப்பூர் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் அதிக தொகுதிகளை எதிர்பார்த்திருந்த பாஜக தொண்டர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூர் தொகுதியில் இந்துக்களின் வாக்குகள் அதிகமாக இருப்பதாலும், பாரம்பரியமாக அங்கு நிலவும் ஆதரவை வைத்தும் எளிதில் வெற்றி பெற முடியும் என பாஜக தலைமை இந்தத் தொகுதியைக் கேட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடந்த காலத் தேர்தல்களில் மயிலாப்பூர் தொகுதியில் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தமாக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. கோவை மற்றும் தென் மாவட்டங்களில் பாஜகவிற்குப் பரவலாக இடங்கள் கிடைத்துள்ள போதிலும், சென்னையில் ஒரேயொரு இடம் மட்டுமே கிடைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.