அரசுப் பள்ளிகளில் 3 நாட்கள் புத்தகப் பை இல்லாத கல்வி... ‘மகிழ்வுடன் முன்னேறும் திட்டத்திற்கு ரூ.1.89 கோடி ஒதுக்கீடு!
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ‘மகிழ்வுடன் முன்னேறும் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 6,279 பள்ளிகளுக்கு ரூ.1.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நடப்பு கல்வியாண்டில் 3 நாட்கள் புத்தகப் பை இல்லாத நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட உள்ளன.
நடப்பு கல்வியாண்டில் டிசம்பர் 1, ஜனவரி 12 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய மூன்று தேதிகளில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் புத்தகப் பை இல்லாத நாட்கள் கடைப்பிடிக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் 6,279 பள்ளிகளுக்கு மொத்தமாக ரூ.1.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பள்ளிக்கும் இந்த 3 நாட்களுக்கான செயல்பாடுகளுக்காக ரூ.3,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகப் பை இல்லாத இந்த நாட்களில் மாணவர்கள் பாடச்சுமையின்றி விளையாட்டு, கலை, இலக்கியம், விநாடி-வினா, படைப்பாற்றல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.