நள்ளிரவு முதல் அமல்... தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - FASTag வருடாந்திர கட்டணமும் உயர்வு!
தமிழகத்தில் உள்ள 77 சுங்கச்சாவடிகளில், முதற்கட்டமாக 60 இடங்களில் நாளை ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய கட்டண முறை அமலுக்கு வருகிறது. மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் மாதம் கட்டணம் மாற்றியமைக்கப்படும். மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு 5% முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இலகுரக வாகனங்கள் (கார், ஜீப், வேன்) போன்றவை ஒருமுறை பயணம் செய்ய ரூ. 5 முதல் ரூ. 10 வரையும், இருமார்க்கப் பயணங்களுக்கு ரூ. 15 முதல் ரூ. 40 வரையும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
கனரக வாகனங்களான பேருந்து, லாரி போன்ற வாகனத்தின் வகையைப் பொறுத்து ரூ. 50 முதல் ரூ. 200 வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகளைப் பாதிக்கும் வகையில் சென்னை பைபாஸ், வானகரம், சூரப்பட்டு, சென்னை - கொல்கத்தா சாலை: நல்லூர், தாம்பரம் - திண்டிவனம் சாலை: பரனூர், ஆத்தூர், வெளிவட்டச் சாலை (ORR): வண்டலூர் - மீஞ்சூர் இடையே உள்ள 4 சுங்கச்சாவடிகள், மதுரை வெளிவட்டச் சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகள், ஈசிஆர் அக்கரை, உத்தண்டி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜாபேட்டை இடையே அறுவழிச் சாலைப் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால், நெமிலி மற்றும் சென்னசமுத்திரம் ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளில் மட்டும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை. இங்கு 2019-ம் ஆண்டு நிலவரப்படியே கட்டணம் வசூலிக்கப்படும்.
FASTag வருடாந்திர பாஸ் உயர்வு:
தனிநபர் வாகன உரிமையாளர்களுக்காகச் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'FASTag வருடாந்திர அனுமதிச் சீட்டு' கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பழைய கட்டணம் ரூ. 3,000 என்ற நிலையில் புதிய கட்டணமாக நாளை முதல் ரூ. 3,075 என அமல்படுத்தப்படுகிறது. இந்த பாஸ் மூலம் ஒரு ஆண்டிற்குள் 200 முறை வரை சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும்.