காலை முதல் அமலுக்கு வந்தது... இன்று முதல் ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி பால் விலை உயர்வு; ரூ.30 வரை வித்தியாசம்!

 

தமிழ்நாட்டில் பால் உற்பத்தி சரிவு மற்றும் கொள்முதல் விலை உயர்வைக் காரணம் காட்டி, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட முன்னணித் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இந்த புதிய விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. 

சமன்படுத்தப்பட்ட பால் 500 மில்லி பாக்கெட் ₹31-லிருந்து ₹32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ₹59-லிருந்து ₹61 ஆகவும் உயர்ந்துள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மில்லி பாக்கெட் ₹35-லிருந்து ₹37 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ₹68-லிருந்து ₹70 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பால்  500 மில்லி பாக்கெட் ₹40-லிருந்து ₹42 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ₹78-லிருந்து ₹81 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் தயிர் பாக்கெட் விலையும் உயர்ந்துள்ளது.

தனியார் பால் நிறுவனங்களின் தொடர்ச்சியான விலை உயர்வு காரணமாக, அரசு கூட்டுறவு நிறுவனமான ஆவின் பால் விலைக்கும் தனியார் பால் விலைக்கும் இடையே லிட்டருக்கு குறைந்தபட்சம் ₹14 முதல் அதிகபட்சமாக ₹30 வரை பிரம்மாண்ட விலை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆரோக்யா பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கடுமையான விலை ஏற்றத்தால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் கவனம் அரசு நிறுவனமான ஆவின் பால் மீது திரும்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.