அக்.20 முதல் அமல்... இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு!
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரும் அக்டோபர் 20ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே எப்.டி.ஏ. (FTA) ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கின. தொடர்ந்து ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 22-ல் உடன்பாடு எட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி புதுடெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தகத்துறை அமைச்சர் டாட் மெக்கிளே முன்னிலையில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பொருட்டு நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் கோயல், வெல்லிங்டன் நகரில் அந்நாட்டு வர்த்தக அமைச்சர் டாட் மெக்கிளே மற்றும் இந்தியத் தூதர் முவான்புய் சையாவி ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஆவணங்களை உறுதி செய்தார். இந்த ஒப்பந்தம் வருகிற அக்டோபர் 20ஆம் தேதியன்று தசரா தினத்தன்று அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
நியூசிலாந்து நாட்டின் 9-வது பெரிய சரக்கு ஏற்றுமதி நாடாக இந்தியா திகழும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் தேதியன்று இந்த ஒப்பந்த மசோதா எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் ஆதரவுடன் 93-29 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும். நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 95 சதவீத பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்படும் அல்லது முழுமையான வரி விலக்கு வழங்கப்படும். தற்போது பீங்கான், தரைவிரிப்புகள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு நியூசிலாந்து விதித்து வரும் 10 சதவீத வரி விலக்கப் பெறுகிறது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 855 கோடி (2 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் நியூசிலாந்து தரப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.