இன்று முதல் அமல்... தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவையில் பெரிய மாற்றம்!

 

இன்று முதல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் இனி தாம்பரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். நெல்லை எக்ஸ்பிரஸ் (திருநெல்வேலி - சென்னை எழும்பூர்): இன்று முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை, காலை 6:25 மணிக்கு தாம்பரத்தை அடைந்ததும் இந்த ரயில் அங்கேயே நிறுத்தப்படும். எழும்பூர் வரை செல்லாது.

ராமேசுவரம் - எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை, காலை 7:10 மணிக்குத் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரத்தில் இருந்தே புறப்படும். பொதிகை எக்ஸ்பிரஸ் (சென்னை எழும்பூர் - செங்கோட்டை): வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை, இரவு 8:05 மணிக்குத் தாம்பரத்தில் இருந்தே புறப்படும்.

சென்னை எழும்பூர் - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ்: வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை, இரவு 9:05 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்படும். பராமரிப்புப் பணிகள் காரணமாகச் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களால் பயணிகள் தங்களது பயணத் திட்டத்தைத் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார். எழும்பூர் செல்ல வேண்டிய பயணிகள் தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் மூலம் சென்னை நகருக்குள் செல்லலாம்.

நெல்லை எக்ஸ்பிரஸ் மாற்றம்: ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 21 வரை. பொதிகை எக்ஸ்பிரஸ் மாற்றம்: ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 22 வரை. தாம்பரம் புறப்பாடு நேரம்: பொதிகை (இரவு 8:05), ராமேசுவரம் (இரவு 9:05). சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.