இன்று முதல் அமலுக்கு வந்தது... நெய், வெண்ணெய் உள்ளிட்ட 67 ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு!

 

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் இணையமான 'ஆவின்' நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் நெய், வெண்ணெய், தயிர், மோர், லஸ்ஸி மற்றும் பால்கோவா போன்ற 67 வகையான பால் உபபொருட்களின் விலையை உயர்த்தி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய விலைகள் இன்று முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன.

100 கிராம் வெண்ணெய் பாக்கெட் விலை ரூ.60-லிருந்து ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 மி.லி நெய் பாக்கெட் விலை ரூ.160-லிருந்து ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை மற்றும் மொத்த விற்பனைக்கான 15 கிலோ நெய் டின் விலை ரூ.13,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குலாப் ஜாமூன் 125 கிராம் ரூ.60 எனவும், 250 கிராம் ரூ.115 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரசகுல்லா 100 கிராம் ரூ.50 எனவும், 200 கிராம் ரூ.95 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.

200 மி.லி மோர் பாக்கெட் விலை ரூ.2 உயர்ந்துள்ளது. 200 மி.லி மில்க்ஷேக் வகைகளின் விலை ரூ.30-லிருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. பால்கோவா, மைசூர் பாகு மற்றும் 250 கிராம் இனிப்புப் பாக்கெட்டுகளின் விலையில் ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் விலை, தீவனச் செலவுகள், பேக்கேஜிங் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் நிர்வாகச் செலவுகள் அதிகரித்ததே இந்த விலை உயர்விற்குக் காரணம் என ஆவின் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், நுகர்வோருக்குத் தரமான பொருட்களைத் தொடர்ந்து வழங்கவுமே இக்கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் வீடுகளில் பலகாரங்கள் செய்ய நெய் மற்றும் பால் இனிப்புகளின் தேவை அதிகரிக்கும் என்பதால், இந்த அதிரடி விலையேற்றம் குடும்ப வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.