உடனடி அமல்... கிரீன் கார்டு வேணும்னா சொந்த நாட்டுக்குக் கிளம்புங்க... ட்ரம்ப் உத்தரவால் இந்தியர்களுக்கு பலத்த அடி!
அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமைக்கான 'கிரீன் கார்டு' பெற விரும்பும் வெளிநாட்டினர், இனி அமெரிக்காவில் தங்கியிருந்தபடி விண்ணப்பிக்க முடியாது என்றும், அவர்கள் உடனடியாகத் தங்களது சொந்த நாட்டுக்கே திரும்ப வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் தங்கிப் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்கள் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டினரிடையே இந்த அறிவிப்பு இடி போல் இறங்கியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, நாட்டின் குடியேற்ற விதிகளில் அதிரடியான கட்டுப்பாடுகளை இன்று முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. அதன் படி, கிரீன் கார்டு பெற விரும்பும் வெளிநாட்டினர் விண்ணப்பிக்கும் போது அமெரிக்க மண்ணில் இருக்கக் கூடாது என்ற புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், ஹெச்-1பி போன்ற தற்காலிகப் பணி விசாக்கள் மூலம் அமெரிக்காவில் தங்கியிருந்தபடியே, அங்குள்ள நிறுவனங்களின் பரிந்துரையோடு கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெறும் நடைமுறை இருந்தது. ஆனால், புதிய உத்தரவின்படி அந்த சலுகை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
புதிய விதிகளின்படி கிரீன் கார்டுக்கான விண்ணப்ப செயல்முறைகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைமுறைகள் அனைத்தும், விண்ணப்பதாரரின் சொந்த நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூலமாகவே முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரீன் கார்டு பெற தகுதி உடையவர்கள் அமெரிக்காவில் தாங்கள் பார்க்கும் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு அல்லது 'ஒர்க் ஃபிரம் ஹோம்' முறையில் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பி, அங்கிருந்தே விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டும்.
அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காகக் காத்திருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தான். இந்த புதிய உத்தரவின் காரணமாக, அமெரிக்காவில் பல ஆண்டுகளாகக் குடும்பத்தோடு வசித்து வரும் இந்தியர்கள், தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளில் இருந்து நிறுத்திவிட்டு, வீடுகளைக் காலி செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது.
அதிபர் டிரம்பின் இந்த "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே" என்ற கடுமையான குடியேற்றக் கொள்கை, சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளதோடு, அமெரிக்க ஐடி நிறுவனங்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.