உடனடி அமல்... வெளிமாநிலங்களுக்கு ஜல்லி, எம்-சாண்ட் கொண்டு செல்ல தடை - தமிழக அரசு உத்தரவு!

 

தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குக் கருங்கல், கல் ஜல்லி மற்றும் எம்-சாண்ட்  உள்ளிட்ட கனிமப் பொருட்களைக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துப் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஆலோசனை: முதலமைச்சர் விஜய் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, கனிம வளங்கள் துறை அமைச்சர் பிரபுவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாண்டி பிற மாநிலங்களுக்குக் கனிமங்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மட்டும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்‌டுள்ளது. இந்தத் தற்காலிகத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறிக் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கனிம வளங்களைப் பாதுகாக்கவும், மாநிலத்திற்குள் நடக்கும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் தேவைகளுக்குத் தடையின்றி கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.