இன்று முதல் அமலுக்கு வந்தது... ரயில்களில் இனி இரட்டிப்பு அபராதம் - முழு அபராத தொகை லிஸ்ட்!

 

இந்திய ரயில்களில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைத் தடுக்கவும் அபராத தொகையை ரயில்வே அமைச்சகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஜன விஸ்வாஸ் சட்டம் 2026-ன் கீழ், இதற்கான புதிய உத்தரவு இன்று  முதலே நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. முறையாகத் டிக்கெட் எடுத்துப் பயணிக்கும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரயில்வே சட்டம் 1989, பிரிவு 137 மற்றும் 138 ஆகியவற்றின் கீழ் இதுவரை ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போருக்குக் குறைந்தபட்ச அபராத தொகையாக 250 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போதைய புதிய திருத்தத்தின்படி, இந்த அபராத தொகை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி டிக்கெட் இன்றி பிடிபடும் பயணிகள், தாங்கள் பயணித்த தூரத்திற்கான ரயில் கட்டணத்துடன் சேர்த்து, கூடுதலாக 500 ரூபாய் குறைந்தபட்ச அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

டிக்கெட் இன்றி பயணிப்பது மட்டுமின்றி, ரயில்களில் நிகழும் மற்ற முக்கிய விதிமீறல்களுக்கான அபராத தொகையையும் ரயில்வே வாரியம் கணிசமாக உயர்த்தியுள்ளது. வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டைக் கொண்டு பயணித்தால், அந்த டிக்கெட் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படுவதுடன், முழு பயணக் கட்டணம் மற்றும் 500 ரூபாய் கூடுதல் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

பெண்கள் வசதிக்காக ஒதுக்கப்பட்ட கோச்சுகள் அல்லது இருக்கைகளில் ஆண்கள் அத்துமீறி அமர்ந்து பயணித்தால், அவர்களுக்கு 2,500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் அத்துமீறல் மற்றும் அநாகரிக நடத்தை: ரயில் அல்லது ரயில் நிலைய வளாகங்களில் மது குடித்துவிட்டுப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மற்றும் அநாகரிகமாக நடப்பவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் உரிய அனுமதியின்றி பிச்சை எடுப்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த விதிகளின்படி, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ரயில்வேயின் இந்த அபராத தொகைகள் 10 சதவீதம் வரை தானாகவே உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, இன்று முதலே நடைமுறைப்படுத்தத் தொடங்கப்பட்டுள்ளது.