முட்டை கொள்முதல் விலை ரூ.7 ஆக உயர்த்த முடிவு!
முட்டை உற்பத்தியின் உலகளாவிய தலைநகரமாக விளங்கும் நாமக்கல் மற்றும் தமிழகத்தின் கோழிப் பண்ணை அதிபர்களுக்குக் கூடுதல் லாபத்தைத் தரும் முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
கோழித் தீவனங்களின் விலை உயர்வு, அண்டை நாடுகளின் போர் பதற்றத்தால் ஏற்பட்ட டீசல் விலை அதிகரிப்பு மற்றும் அதன் எதிரொலியாகத் தமிழகத்தில் லாரி வாடகைக் கட்டணம் 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டிருப்பது கோழிப் பண்ணைத் தொழிலைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தத் தொடர் நஷ்டம் மற்றும் உற்பத்திச் செலவினங்களைச் சமாளிக்கும் பொருட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை வரலாற்றிலேயே முதன்முறையாக 7 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.
முட்டை விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் மேலும் பேசுகையில், "தற்போது கோழிப் பண்ணைத் தொழிலில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை சமாளிக்க, மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களைக் கோழிப் பண்ணை உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுத்தத் தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்" என்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
மேலும், வளைகுடா நாடுகளில் நிலவி வந்த கொடூரமான போர் பதற்றம் காரணமாக, நாமக்கல்லில் இருந்து ஓமன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்குக் கப்பல் மூலம் அனுப்பப்பட்டு வந்த முட்டை ஏற்றுமதி தற்பொழுது முற்றிலும் முடங்கியுள்ளது.
ஏற்கனவே உள்நாட்டுச் சந்தையில் தீவன விலை உயர்வால் தவித்து வந்த பண்ணையாளர்களுக்கு, இந்த ஏற்றுமதி பாதிப்பும் சேர்ந்து பேரிடியாக இறங்கியுள்ளது. பண்ணைக் கொள்முதல் விலையே 7 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் வெளிச்சந்தையில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு முட்டையின் சில்லறை விற்பனை விலை 8 ரூபாய் முதல் 9 ரூபாய் வரை எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது அன்றாடம் முட்டையை நம்பியிருக்கும் ஏழை எளிய நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் பள்ளி விடுதிகளுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.