அங்கன்வாடி மையத்தில் அதிர்ச்சி... குழந்தைக்குக் கொடுத்த முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்தில் குழந்தைகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் சத்துணவாக வேகவைத்த முட்டைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முட்டைகள் வீதம் அவர்களின் பெற்றோரிடம் நேரடியாகக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 20-ந்தேதி 1 வயது குழந்தையின் பெற்றோரிடம் வழக்கம்போல் 3 முட்டைகள் அங்கன்வாடி ஊழியரால் வழங்கப்பட்டுள்ளன.
வீட்டிற்கு எடுத்துச் சென்ற அந்த முட்டைகளில் ஒன்றை வேகவைத்து உடைத்துப் பார்த்தபோது, அதற்குள் இறந்து அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு இருந்ததைக் கண்டு பெற்றோர் உறைந்துபோயினர். உடனடியாக அந்த முட்டையை அங்கன்வாடி மையத்திற்கு எடுத்துச் சென்று ஊழியரிடம் காண்பித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அதற்கு ஊழியர் சரிவரப் பதில் அளிக்காததால் இந்தத் தகவல் மற்ற பெற்றோர்களுக்கும் பரவி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு வழங்கப்படும் உணவில் இத்தகைய அலட்சியம் காட்டியது குறித்துப் பெற்றோர் கடும் ஆத்திரமும் கவலையும் அடைந்தனர்.
இந்த விவகாரம் குறித்துத் தகவலறிந்த சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பத்மா நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். பிரச்சினைக்குரிய முட்டையின் ஓடுகளை ஆய்வு செய்து, அவை அரசு வழங்கியதா அல்லது வெளியில் வாங்கப்பட்டதா என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். சிறு குழந்தைகளின் உயிருடன் விளையாடும் வகையில் செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.