எகிறுது பட்ஜெட்... தமிழகத்தில் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு - இல்லத்தரசிகள் கலக்கம்!
தமிழகத்தில் மக்கள் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் வேளையில், இந்த திடீர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பெரிதும் பாதித்துள்ளது.
சமையலில் காரத்திற்குப் பயன்படுத்தப்படும் மிளகாய் வற்றல் கடந்த மாதம் ஒரு கிலோ 220 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்பொழுது தரத்திற்கு ஏற்ப 270 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. குழம்புத்தூள் அரைக்கப் பயன்படும் தனியாவின் விலையும் கிலோ 150 ரூபாயில் இருந்து உயர்ந்து 220 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மளிகை பொருட்களிலேயே மிகக் கடுமையான விலை உயர்வைச் சந்தித்துள்ள பூண்டு, முன்பு கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு தற்போது 280 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாமாயில் விலை லிட்டர் 150 ரூபாயிலிருந்து 185 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் வெல்லத்தின் விலை கிலோ 50 ரூபாயிலிருந்து இரட்டிப்பாகி 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. முந்திரி பருப்பு கிலோ 700 ரூபாயிலிருந்து 950 ரூபாயாகவும், பாதாம் பருப்பு கிலோ 250 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாகவும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஏழை எளிய மக்களின் அன்றாட உணவான அரிசியின் விலையும் கிலோவுக்கு 8 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்து தமிழகத்திற்கான வரத்து குறைந்ததே அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
மற்ற அனைத்து இனிப்பு பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டிருக்கும் வேளையில், வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலை மட்டும் கிலோ 70 ரூபாயிலிருந்து குறைந்து 60 ரூபாயாகியுள்ளது. மளிகை பொருட்களுடன் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் மாதாந்திர செலவு அதிகரித்துள்ளது. எனவே, வருகின்ற பண்டிகை காலங்களில் பொதுமக்களைப் பாதுகாக்க அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.