எல் நினோ மழையால் உலகின் வறண்ட பாலைவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்!  

 

 

உலகின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்றான சிலியின் அட்டகாமா பாலைவனம் தற்போது வண்ணமயமான பூக்களால் பூத்துக் குலுங்கி வருகிறது. எல் நினோவுடன் தொடர்புடைய கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த அரிய இயற்கை நிகழ்வு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.சிலியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அட்டகாமா பாலைவனம், ஆண்டின் பெரும்பாலான காலங்களில் மிகக் குறைந்த மழைப்பொழிவையே பெறுகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வறண்ட நிலப்பரப்பாகவே காணப்படும்.

ஆனால் இந்த ஆண்டு பெய்த அசாதாரணமான கனமழைக்குப் பிறகு பாலைவனத்தின் தோற்றமே மாறியுள்ளது. மண்ணுக்கு அடியில் நீண்ட காலமாக உறக்க நிலையில் இருந்த விதைகள் மற்றும் கிழங்குகள் போதுமான ஈரப்பதம் கிடைத்ததும் முளைத்து பூக்கத் தொடங்கியுள்ளன.இதன் காரணமாக வழக்கமாக வறண்டு காணப்படும் நிலப்பரப்பில் தற்போது ஊதா, வெள்ளை உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் பூக்கள் மலர்ந்துள்ளன. இந்த இயற்கை நிகழ்வு சிலி நாட்டில் “Desierto Florido” அல்லது “Flowering Desert” என்று அழைக்கப்படுகிறது.

அட்டகாமா பாலைவனத்தின் மண்ணுக்குள் சுமார் 200 வகையான தாவரங்களின் விதைகள் மற்றும் கிழங்குகள் நீண்ட காலம் உயிரற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெப்பநிலை மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் சரியான நிலையில் அமையும் போது அவை மீண்டும் உயிர்பெற்று பூக்களை உருவாக்குகின்றன.

இந்த ஆண்டு பெய்த மழை குறிப்பாக அதிகமாக இருந்ததாகவும், சில பகுதிகளில் 180 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த ஆண்டு பூக்கும் பாலைவனத்தின் பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என சிலி தேசிய வனக் கழகம் (CONAF) கணித்துள்ளது.

அரிய இயற்கைக் காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அட்டகாமா பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்த மலர்ச்சி நிகழ்வு அக்டோபரில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.நீண்ட காலமாக வறண்டு கிடந்த பாலைவனம், மழைக்குப் பிறகு திடீரென வண்ணமயமான பூஞ்சோலையாக மாறியிருப்பது இயற்கையின் வியக்க வைக்கும் மாற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.