எல்-நினோ அபாயம்... தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வறட்சி எச்சரிக்கை!

 

பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் எல்-நினோ காலநிலை மாற்றங்கள் காரணமாக, இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விடக் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதன் தாக்கத்தால் நாடு முழுவதும் 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 12 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய அதிக ஆபத்துள்ள பகுதிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், இந்த வறட்சி அபாயத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வாரியான அவசரகாலத் திட்டங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, தமிழகத்தில் போதிய பாசன வசதிகள் இல்லாத மற்றும் மழையை மட்டுமே நம்பியிருக்கும் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 12 மாவட்டங்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

பருவமழை பொய்த்தால் ஏற்படும் விவசாய இழப்புகளைக் குறைக்கும் பொருட்டு, இந்த 12 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்குத் தமிழ்நாடு வேளாண்மைத் துறை மற்றும் மத்திய அரசு இணைந்து சில அவசர ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

அதிகத் தண்ணீர் தேவைப்படும் பயிர்களைத் தவிர்த்து விட்டு, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மற்றும் மிகக் குறைந்த நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய எள், உளுந்து, பாசிப்பயறு போன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விளைநிலங்களில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க 'மூடாக்கு' போன்ற நவீன அறிவியல் முறைகளைக் கையாளுமாறும், சொட்டுநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வறட்சி மாவட்டங்களில் நீர்ச் சேமிப்புத் திறனை அதிகரிக்க, ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழையைத் தொடர்ந்து வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக் காலத்திலும் இந்த எல்-நினோவின் தாக்கம் நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறையைத் தவிர்க்கவும், குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும் தவெக அரசு தற்போதே தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.