கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி நகைக்காகக் கொலை - 11 சவரன் தாலிச்செயின் மாயம் - சிவகங்கையில் கொடூரம்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பூச்சியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி, நகைக்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது காவல் துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த பூச்சியம்மாள் (70) என்ற மூதாட்டி, கடந்த ஜூலை 26 அன்று மாலையில் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடி வந்த நிலையில், மறுநாள் காலையில் அங்குள்ள ஒரு கால்வாயில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இறந்துபோன பூச்சியம்மாள் தனது கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் எடையுள்ள தங்கத் தாலிச்செயின் காணாமல் போயிருப்பதாக அவரது மகன் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மூதாட்டியை வழிமறித்த மர்ம நபர்கள், அவரிடமிருந்த 11 சவரன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு அவரைக் கொடூரமாகக் கொலை செய்து கால்வாயில் வீசிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், நகைகளுக்காக மூதாட்டியைக் கொலை செய்த மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.