தேர்தல் 2026: மயிலாடுதுறையில் வெற்றி யாருக்கு? காங்கிரஸ் கோட்டையைத் தகர்க்குமா அதிமுக?!

 

காவிரி டெல்டா பகுதியின் இதயப் பகுதியாகத் திகழும் மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில், இந்த முறை கடும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளும், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுமே இந்தத் தேர்தலின் வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கப் போகின்றன.

மயிலாடுதுறை தொகுதி பாரம்பரியமாகப் பல்வேறு கட்சிகளுக்கு வாய்ப்பளித்த ஒரு தொகுதியாகும். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 5 முறை வெற்றி பெற்றுள்ளன. அதிமுக  2 முறை வெற்றி பெற்றுள்ளது. தமாகா, பாஜக, தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த தேர்தல் (2021) காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எஸ். ராஜகுமார், சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போதைய எம்.எல்.ஏ-வாக உள்ளார்.

மயிலாடுதுறையின் பிரதானத் தொழில் விவசாயம். இங்கு நெல் சாகுபடி மிக அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, வாக்காளர்கள் மத்தியில் நிலவும் தற்போதைய மனநிலை.  மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் நெல் கொள்முதல் விலையும், அதற்கான ஊக்கத்தொகையும் விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து வரும் காவிரி நீர் கடைமடைப் பகுதியான மயிலாடுதுறைக்குச் சீராக வந்து சேருவதை உறுதி செய்யும் வேட்பாளருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என விவசாயிகள் கூறுகின்றனர். அறுவடை காலங்களில் நெல் நனையாமல் பாதுகாக்கப் போதுமான நவீன நெல் சேமிப்புக் கிடங்குகளை அமைத்துத் தருவது நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது.

தற்போது திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், அதிமுக களம் காணத் தயாராகி வருகின்றன. "யார் வாக்குறுதி கொடுத்தாலும், களத்தில் இறங்கி விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பவர்களுக்கே எங்கள் வாக்கு," என மயிலாடுதுறை தொகுதி மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தொகுதி சீரமைப்புக்குப் பிறகு மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவெடுத்திருப்பது, இந்தத் தேர்தலில் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேட்பாளரே மயிலாடுதுறையின் அடுத்த பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.