தேர்தல் எதிரொலி: பட்டாசு விற்பனை, உற்பத்திக்குத் தடை... மீறினால் உரிமம் ரத்து!
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பட்டாசு முதலிய் அவெடிபொருட்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், பொது அமைதியைப் பேணவும் புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக இந்தப் பட்டாசுத் தடை அமல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக புதுவையில் வாக்குப்பதிவு ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 10ம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இரண்டாம் கட்டமாக மே 2ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெடிப்பொருள் சட்டம் மற்றும் விதிகளின்படி பட்டாசு மற்றும் வெடிமருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கக் கூடாது. வெடிபொருட்களைப் பாதுகாத்து வைக்கும் கிடங்குகள் மற்றும் குடோன்கள் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும். சில்லறை மற்றும் மொத்த பட்டாசுக் கடைகள் இயங்க அனுமதி இல்லை என இவற்றுக்கு எல்லாம் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் சார்பாக இந்த தடை உத்தரவை மீறிப் பட்டாசு விற்பனையிலோ அல்லது தயாரிப்பிலோ ஈடுபடுவோரின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். விதியை மீறுவோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், அரசியல் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடித்துப் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.