வாக்குப்பதிவு விவரம் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை அப்டேட் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு அன்று நடக்கும் நிலவரங்களை உடனுக்குடன் பொதுமக்கள் தெரிந்துகொள்ளத் தேர்தல் ஆணையம் புதிய டிஜிட்டல் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் ஒருங்கிணைந்த தளமான 'இசிஐநெட்' மற்றும் அதன் ஒரு பகுதியான 'வோட்டர் டர்ன் அவுட்' செயலி மூலம் மக்கள் இனி வீட்டிலிருந்தே வாக்குப்பதிவு சதவீதத்தைக் கண்காணிக்கலாம். முன்னதாக வாக்குப்பதிவு முடிந்த பிறகே இறுதி விவரங்கள் அறிவிக்கப்படும். ஆனால், இனி நேரலையாக விவரங்கள் வெளியாகும்.

இந்தச் செயலியின் சிறப்பம்சங்கள் வாக்குப்பதிவு தொடங்கும் காலை 7 மணி முதல், ஒவ்வொரு 2 மணிநேர இடைவெளியிலும் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற விவரம் இதில் பதிவேற்றப்படும். மாநில அளவில் மட்டுமல்லாமல், உங்கள் குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதியிலும், நாடாளுமன்றத் தொகுதியிலும் (இடைத்தேர்தல் இருப்பின்) நிலவும் சதவீதத்தை இந்தச் செயலி மூலம் எளிதாக அறியலாம்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள்  வழங்கும் துல்லியமான தரவுகள் இதில் இடம்பெறும் என்பதால், வதந்திகளை நம்பத் தேவையில்லை.

இது குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், "பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் வாக்குப்பதிவு நிலவரத்தை வெளிப்படையாகவும், எளிதாகவும் தெரிந்துகொள்ளவே இந்தத் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.