தேர்தல் திருவிழா.. தொடர் விடுமுறை... தமிழகம் முழுவதுமாக 10,663 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யத் தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏப்ரல் 23 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்குக் கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் எனத் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், வெளியூர்களில் தங்கிப் பணிபுரியும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.
மக்களின் இந்தத் தேர்தல் பயணத்தைச் சீரமைக்க, தமிழகப் போக்குவரத்துக் கழகம் பிரம்மாண்டமான பேருந்து திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, வாக்களிக்கச் சொந்த ஊர் செல்ல வசதியாக ஏப்ரல் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களுக்கு மொத்தம் 10,663 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,574 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்ட முக்கிய நகரங்களுக்கு இடையே சுமார் 2,997 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நெரிசலின்றி பயணம் செய்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதே இந்தச் சிறப்பு ஏற்பாட்டின் முக்கிய நோக்கம். தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், போக்குவரத்துத் துறையின் இந்த அறிவிப்பு வெளியூர் வாக்காளர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.