தேர்தல் விதிமுறைகள் : தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!

 

சட்டமன்றப் பொதுத்தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் படைக்கலன்களை வைத்திருப்பவர்கள், அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர்களும் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் அமைதியான முறையிலும் பாதுகாப்பான முறையிலும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதன் விளைவாக, தூத்துக்குடி மாவட்டத்தில் படைக்கலன் (துப்பாக்கி) உரிமம் பெற்று படைக்கலன்களை வைத்திருப்பவர்கள், அவற்றை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்குகளிலோ ஒப்படைத்து இருப்பு வைத்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை இந்த விதிமுறை நடைமுறையில் இருக்கும் என்றும், உரிமதாரர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.