2026 தமிழகத் தேர்தல்... 12.51 லட்சம் 'புது வாக்காளர்கள்’ ... 100 வயதைக் கடந்த 2,530 வாக்காளர்கள்! 

 


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் இளைஞர்களின் பங்களிப்பும், மூத்த குடிமக்களின் எண்ணிக்கையும் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் முதல்முறையாகத் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றக் காத்திருக்கும் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம் ஆகும். இவர்களின் வாக்குகள் வரவிருக்கும் தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 1.05 கோடியாக உள்ளது.


தமிழகத்தில் நூறு வயதையும் தாண்டி ஜனநாயகத்தின் மீது பற்றுடன் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,530 ஆகும். இவர்களுக்குத் தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு மரியாதையும், வசதிகளும் செய்யப்பட உள்ளன.இந்த வயதிற்குட்பட்ட முதியவர்கள் சுமார் 4 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்குத் தேர்தல் ஆணையம் வீட்டிலிருந்தே வாக்களிக்கும்  வசதியைச் செய்து தர வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும் 4.63 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம் மற்றும் சக்கர நாற்காலி வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.


ராணுவம் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் சேவைப் பணியாளர் (Service Voters) வாக்காளர்களின் எண்ணிக்கை 67,056 ஆகும். இவர்கள் தபால் வாக்குகள் மூலம் தங்களது உரிமையைச் செலுத்த உள்ளனர்.தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.67 கோடி ஆகும். இதில் ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை (சுமார் 2.89 கோடி) அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மிக அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகச் செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் (5.36 லட்சம் வாக்காளர்கள்) தொடர்கிறது.