சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் சில தொகுதிகள் மாநிலமே வியக்கும் வண்ணம் மிகப்பெரிய வாக்கு வித்தியாசங்களைப் பதிவு செய்துள்ளன. இதில் முதலிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரை விட 98,110 வாக்குகள் அதிகம் பெற்று சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சரவணன், திமுக வேட்பாளரை விட 96,780 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை மாதவரம் தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. அங்கு தவெக வேட்பாளர் விஜய் பிரபு, திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனத்தை விட 94,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் ஆகிய சென்னை புறநகர் பகுதிகளில் தவெக வேட்பாளர்கள் 90 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பது அக்கட்சியின் அசுர பலத்தைக் காட்டுகிறது.
மேலும் பூந்தமல்லி தொகுதியில் தவெக வேட்பாளர் பிரகாசம் (72,740 வாக்கு வித்தியாசம்), சேலம் கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் எஸ்.லட்சுமணன் (74,867 வாக்கு வித்தியாசம்) மற்றும் திருப்பூர் வடக்கில் தவெக வேட்பாளர் வி.சத்யபாமா (69,992 வாக்கு வித்தியாசம்) எனப் பல வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். குறிப்பாக விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் 62,073 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளார்.