மாநிலங்களவை தேர்தல் விறுவிறுப்பு...  வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

 

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இதில் 24 இடங்கள் வழக்கமான தேர்தல் மூலமாகவும், 3 இடங்கள் இடைத்தேர்தல் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காலியாகும் இடங்களுக்கு இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கடந்த மே மாதம் ராஜினாமா செய்ததால் அந்த இடத்திற்கு தற்பொழுது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் இன்று ஆகும். தமிழகத்தில் ஆளும் கூட்டணி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி மட்டுமே இதுவரை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இன்று தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் அனைத்தும் ஜூன் 9 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப் பரிசீலனை செய்யப்பட உள்ளன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற விரும்பும் வேட்பாளர்கள் ஜூன் 11 ஆம் தேதிக்குள் தங்களின் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் தேர்தலில் போட்டி இருக்கும் பட்சத்தில் ஜூன் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.