தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணைய மாநாடு... துணைத் தேர்தல் ஆணையர் மற்றும் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்பு!
இன்று முழுவதும் நடைபெறும் இந்நிகழ்வில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, தலைமை இயக்குநர் ஆஷிஷ் கோயல் மற்றும் சீமா கண்ணா உள்ளிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 300 பள்ளிகள், 75 கல்லூரிகள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் என சுமார் 1,000 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். 500 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேலும் துணை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் துறைசார் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.
இன்று காலை அமர்வில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சுமார் 500 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடி, கள அளவிலான வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் களப்பணி சார்ந்த கருத்துக்களை கேட்டறிவார் கேள்வி-பதில் அமர்வு இன்று மதியம், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஜனநாயக பங்களிப்பு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றுவார். அதைத் தொடர்ந்து நடைபெறும் கேள்வி-பதில் அமர்வில் அவர் பங்கேற்பார் மற்றும் இந்த மாநாட்டில் வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளின் நேரடி செயல்விளக்கங்கள் இடம்பெறும்.
கூடுதல் சிறப்பம்சங்களாகக் கலந்துரையாடல் கண்காட்சி பலகைகள், தேர்தல் வினாடி வினாக்கள் மற்றும் ELC 2.0, ஒருங்கிணைந்த ECINET செயலி போன்ற தொழில்நுட்பத் தளங்களின் பயன்பாடுகளும் இந்த மாநாட்டில் முழுமையாக இடம்பெறுகின்றன. இதன் மூலம் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே தீவிரமாகப் பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ள இந்த மாநாடு தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.