தேர்தல் எல்லாம் கிடையாது... நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷாலின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளான தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தேர்தல் நடத்தப்படாமல் மேலும் 3 ஆண்டுகளுக்குப் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் சுமார் 60% பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் நடத்தினால், அந்தப் பணிகள் பாதிக்கப்படும் என்றும், நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2024 செப்டம்பரில் நடைபெற்ற நடிகர் சங்கப் பொதுக்குழுவில், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 2025 முதல் 2028 வரை நீட்டிக்க ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டியே உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நீட்டிப்பை எதிர்த்து நடிகர் நம்பிராஜன் தொடர்ந்த வழக்கில், "பொதுக்குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உண்டு; இதில் எந்த விதிமீறலும் இல்லை" என விஷால் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் 'பாண்டவர் அணி'யாகக் களம் கண்டு வரும் இந்த மூவர் கூட்டணியும், நடிகர் சங்கக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதே தங்களின் லட்சியம் என உறுதியாக உள்ளனர். தற்போது கிடைத்துள்ள இந்த 3 ஆண்டு நீட்டிப்பு, கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.