சிக்னல் கோளாறால் ஸ்தம்பித்த மின்சார ரயில்கள்...பயணிகள் கடும் அவதி !

 

செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரயில் வழித்தடத்தில் திடீரென ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, பல்வேறு இடங்களில் ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறின் காரணமாக, அங்கிருந்து புறப்பட வேண்டிய மற்றும் கடந்து செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் மிகவும் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த திடீர் கோளாறு காரணமாக பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்சார ரயில்களும், விரைவு ரயில்களும் முப்பது நிமிடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டன. இதனால் காலையில் வழக்கம்போல் அலுவலகங்களுக்குப் புறப்பட்ட பணியாளர்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லவிருந்த மாணவ, மாணவிகளும் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர்.

தினசரி7  முதல் எட்டு லட்சம் வரையிலான பொதுமக்கள் பயணிக்கும் இந்த பிரதான வழித்தடத்தில், வழக்கமாக பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இன்று காலை நேர நெரிசலில் எதிர்பாராத விதமாக இந்த சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால், அதனை விரைந்து சரிசெய்யும் பணிகளில் ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.