மின்கட்டணக் குளறுபடியைச் சரிசெய்ய வேண்டும்... மின்கட்டண அவகாசத்தை நீட்டிக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
தமிழகத்தில் மின்சாரத் துறையில் தொடர்ச்சியான தடங்கல்கள் நிலவி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மின்சார விநியோகத்தில் பல்வேறு சிக்கல்கள் தொடர் கதையாகி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடக்கத்தில் மின்வெட்டுப் பிரச்சினை பொதுமக்களைப் பெரிதும் அவதிக்குள்ளாக்கிய நிலையில், தற்போது மின்கட்டணக் கணக்கீட்டில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதாக இதுவரை சுமார் 3.70 லட்சம் குடும்பங்கள் புகாரளித்துள்ள நிலையை அரசே ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்தத் தவறான கணக்கீட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கை இதைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த மின்கட்டணப் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்சாரக் கட்டணக் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து குளறுபடிகளும் முழுமையாகக் கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்படும் வரை, பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அரசை வலியுறுத்தியுள்ளார். தவறுதலாகக் கணக்கிடப்பட்ட கட்டணங்களால் பொதுமக்கள் எவ்விதப் பாதிப்புக்கும் ஆளாகக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக தலைவரின் இந்த முக முக்கியமான பதிவு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.