முதியோர் இல்லத்துக்கு ரூ.4.3 லட்சம் கரண்ட் பில் - அதிர்ச்சியில் நிர்வாகம்!

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயங்கி வரும் தனியார் முதியோர் இல்லத்திற்கு ரூ.4.39 லட்சம் மின்கட்டணம் செலுத்தக் கோரி குறுஞ்செய்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடியில் உள்ள குறித்த தனியார் முதியோர் இல்லத்திற்கு வழக்கமாக மாதம் தோறும் ரூ.7,000 வரை மட்டுமே மின்கட்டணம் வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான மின்கட்டணமாக ரூ.4,39,743 செலுத்த வேண்டும் எனக் குறுஞ்செய்தி வந்ததைக் கண்டு முதியோர் இல்ல நிர்வாகிகள் நிலைகுலைந்து போயினர். இந்த அநியாயக் கட்டண உயர்வு குறித்து முதியோர் இல்லக் காப்பாளர் உடனடியாக மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

மின்வாரியச் செயற்பொறியாளர் லதாதேவி அளித்த உத்தரவின் பேரில், கணக்கீட்டுப் பிரிவு அதிகாரிகள் முதியோர் இல்லத்தின் மின் மீட்டரையும், கட்டண விவரங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், மின்வாரியத்தின் கணக்கீட்டு மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குளறுபடி காரணமாகவே இந்தத் தவறான கட்டணத் தொகை குறுஞ்செய்தியாகச் சென்றுள்ளது கண்டறியப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் நேர்ந்த இந்தத் தவறு உடனடியாகச் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த பிறகே முதியோர் இல்ல நிர்வாகிகள் நிம்மதி அடைந்தனர்.