மின் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்தால் கூடுதல் அபராதம் - மின்வாரியம் எச்சரிக்கை!

 

தமிழகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும், விதிகளை மீறித் திருட்டுத்தனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக அல்லது மின்கட்டணம் செலுத்தாததால் மின்வாரிய ஊழியர்களால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில், ஒருசிலர் முறைகேடான வழிகளில் மீண்டும் மின்சாரத்தைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு  அனுமதியின்றித் தாங்களாகவே திருட்டுத்தனமாகப் 'பியூஸ் கேரியர்களை' மீண்டும் பொருத்தி மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிய மின்வாரியம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குக் கூடுதல் வரியுடன் கூடிய கடுமையான அபராதத் தொகையை விதிக்க மின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்வாரியப் பறக்கும் படையினர் மற்றும் உதவிப் பொறியாளர்கள் தொடர் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின் திருட்டு என்பது ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான குற்றமாகும். எனவே, அபராதம் விதிப்பதோடு மட்டுமன்றி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் நிலையங்களில் மின் திருட்டு வழக்கின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளும் பாயும்.

மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான முறைகேடுகளில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், மின் கட்டண நிலுவைகளைச் சீராகச் செலுத்தி தங்களது மின் இணைப்புகளைச் சட்டப்பூர்வமாகப் பராமரிக்குமாறும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.