ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர வாய்ப்பில்லை - முடங்கியது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிகள்!
தமிழகத்தில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (மின்வாரியம்) அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வைத் தீர்மானிக்கும் முக்கிய அமைப்பான தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிகள் தற்காலிகமாக முடங்கியுள்ளதே இதற்குக் காரணமாகும்.
பொதுவாக, ஆண்டுதோறும் நுகர்வோர் மின் கட்டண மாற்றங்கள் மற்றும் ஒழுங்குமுறை விபரங்கள் இந்த ஆணையத்தின் மூலமாகவே இறுதி செய்யப்படுவது வழக்கம்.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமானதுமின் கட்டணத்தை நிர்ணயம் செய்தல், மின் வாரியம் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குதல் போன்ற மிக முக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையத்தில் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டியது சட்டப்பூர்வ விதியாகும்.
இந்நிலையில், இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த மணிவண்ணன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன், இதர உறுப்பினர் பணியிடங்களும் தற்போது காலியாக உள்ளதால், புதிய முடிவுகளை எடுப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாத சூழல் நிலவுகிறது. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால், ஆணையத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாடுகளும் முடங்கியுள்ளன.
ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் மற்றும் உத்தரவு இல்லாமல் மின்வாரியத்தால் தன்னிச்சையாக மின் கட்டணத்தை உயர்த்த முடியாது. புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தமிழக அரசு முறைப்படி நியமித்து, அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகே மின் கட்டணம் தொடர்பான எந்தவொரு கோப்புகளையும் பரிசீலனை செய்ய முடியும்.
இந்த நிர்வாக நடைமுறைகளுக்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்பதால், வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயருவதற்கு எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மின் கட்டண உயர்வு அச்சத்தில் இருந்த தமிழக மக்களுக்கு, மின்வாரிய அதிகாரிகளின் இந்தத் தகவல் தற்காலிகமாகப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.