கோவில் திருவிழாவில் யானை அட்டகாசம்.. லாரி ஓட்டுநர் மிதித்துக்கொலை - 2 பேர் படுகாயம்!

 

கேரள மாநிலம் அங்கமாலி அருகே கிடங்கூர் மகாவிஷ்ணு கோவில் திருவிழாவில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. திருவிழாவிற்காகக் கொண்டு வரப்பட்ட "மையநாடு பார்த்தசாரதி" என்ற வளர்ப்பு யானை, திடீரென மதம்பிடித்து ஆக்ரோஷமாகத் தாக்கியதில் லாரி ஓட்டுநர் விஷ்ணு என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவிலுக்கு அழைத்துச் செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த யானை, அங்கிருந்த வாகனங்களைச் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியதால் திருவிழா கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மதம்பிடித்த யானையை அடக்க முயன்ற தலைமைப் பாகன் பிரதீப் உட்பட இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஓட்டுநரின் உடலுக்கு அருகிலேயே யானை நீண்ட நேரம் நின்றிருந்ததால், மீட்புப் படையினரால் உடலை உடனடியாக மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறை மீட்புக் குழுவினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள், யானைக்கு மயக்க மருந்து செலுத்திப் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கேரளாவில் கோவில் திருவிழாக்களின் போது யானைகள் மதம்பிடித்துத் தாக்குவது தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு கடும் விதிகளை விதித்துள்ளது.

இருப்பினும், பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்படும் குளறுபடிகளால் மீண்டும் ஒரு உயிர் பலியாகியுள்ளது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.