30 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை - 13 மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்பு!

 

 கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில், 30 அடி ஆழமுள்ள குறுகலான கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானையை, வனத்துறையினர் சுமார் 13 மணி நேரம் போராடிப் பத்திரமாக மீட்டனர்.

சுள்ளியா வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்குள் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. அப்போது எதிர்பாராதவிதமாகத் தரைமட்டமாக இருந்த 30 அடி ஆழ கிணற்றுக்குள் அந்த யானை விழுந்தது. கிணறு மிகவும் குறுகலாக இருந்ததால், யானையால் திரும்பக் கூட முடியாமல் தண்ணீருக்குள் தத்தளித்தபடி பிளிறியது.

யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். நள்ளிரவு என்பதால் மீட்பதில் சிக்கல் நீடித்த நிலையில், நேற்று காலை 6 மணி அளவில் மீட்புப் பணிகள் தொடங்கின.

யானையை நேரடியாகத் தூக்க முடியாது என்பதால், பொக்லைன் இயந்திரம் மூலம் கிணற்றின் பக்கவாட்டில் சரிவான பாதை தோண்டப்பட்டது. யானை இருக்கும் மட்டம் வரை தரைப்பகுதி தோண்டப்பட்டு, அது தானாகவே வெளியேறுவதற்கான வழி உருவாக்கப்பட்டது. சுமார் 13 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மாலை வேளையில் யானை அந்தச் சரிவான பாதையின் வழியாக வெளியே வந்தது.

கிணற்றை விட்டு வெளியே வந்ததும் ஆக்ரோஷமடைந்த யானை, தனக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த பொக்லைன் இயந்திரத்தைச் சினம் கொண்டு தாக்கியது. பின்னர் அங்கிருந்த விவசாய நிலங்களுக்குள் ஓடியது. இறுதியில் வனத்துறையினர் மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் அந்த யானையை பாதுகாப்பாக மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குப் போராடிய யானையைச் சாமர்த்தியமாக மீட்ட வனத்துறையினரை அந்தப் பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.