யானைத் தாக்கி ஐபிஎஸ் அதிகாரி மனைவி உயிரிழப்பு.. தோட்டத்தில் சுற்றிப் பார்த்த போது கொடூரம்!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள கோனனகட்டே கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தியா அச்சய்யா. டெல்லியில் காவல்துறை இயக்குநராகப் பணியாற்றும் மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரி சுனில் அச்சய்யாவின் மனைவியான இவர், தனது காபி தோட்டத்தில் தினசரி பணிகளைப் பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார்.
அவர் தோட்டத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, அங்கு எதிர்பாராத விதமாக நுழைந்த காட்டு யானை ஒன்று சந்தியா அச்சய்யாவை ஓட ஓட விரட்டித் தாக்கியது. இந்த கொடூரத் தாக்குதலில் உடல் நசுங்கி பலத்த காயமடைந்த அவர், எவ்வித சிகிச்சையும் இன்றி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சோகமான சம்பவம் அந்த காபி தோட்டப் பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்களிடையே தற்பொழுது பெரும் பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.