சோகம்... அணைப் பகுதியில் மயங்கிக் கிடந்த குட்டி யானை பலி... !

 

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த அணைப் பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையின் பரிதாப நிலை குறித்துத் தங்களின் உயர் அதிகாரிகளுக்கும், அரசு கால்நடை மருத்துவருக்கும் உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை உதவி மருத்துவர் சதாசிவம், காயம் அடைந்து கிடந்த குட்டி யானையின் உடலில் இருந்த காயங்களுக்கு மருந்து போட்டுத் தீவிர சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர் மற்றும் வனத்துறையினர் இணைந்து குட்டி யானையின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குட்டி யானை விரைவில் குணமாகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அது திடீரென உயிரிழந்தது.

யானையின் உடலில் காயங்கள் இருந்ததால் வேறு ஏதாவது காட்டு விலங்குகள் அதனைத் தாக்கியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையாகத் தெரியவரும் என மருத்துவர் கூறியுள்ளார். மரணமடைந்த குட்டி யானையின் முகத்தில் இருந்த சுமார் 1 அடி நீளமுள்ள 2 தந்தங்கள் முறைப்படி வெட்டி எடுக்கப்பட்ட பின், உடல் வனப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது. வனப் பகுதியில் நடந்த இந்த இளம் குட்டி யானையின் திடீர் மரணம் வன ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.