மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை விரட்டியடித்த  காட்டு யானை... நீலகிரியில் பரபரப்பு! 

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பாதைகளில் பலாப்பழ சீசன் காரணமாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. பலாப்பழங்களைச் சாப்பிடுவதற்காகச் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தொடர்ந்து முகாமிட்டு வருகின்றன. கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றைக் காட்டு யானை கடந்த சில நாட்களாக மரப்பாலம், இச்சி மரம் மற்றும் காட்டேரி பூங்கா சாலைகளில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் காட்டேரி பூங்கா முன்பு உள்ள சாலையை திடீரெனக் கடந்து சென்ற காட்டு யானை அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த சுற்றுலா பயணிகளை ஆக்ரோஷமாக விரட்டியுள்ளது. இதனால் அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதோடு அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த வாகனங்களையும் யானை வழிமறித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்துத் தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் மலைப்பாதையில் எச்சரிக்கையுடன் பயணம் செய்யுமாறு வனத்துறையினர் தொடர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். காட்டு யானைகளின் தொடர் நடமாட்டம் அப்பகுதி மக்களிடமும் சுற்றுலா பயணிகள் மத்தியிலும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.