முதுமலை காப்பகத்தில் பெண் காட்டு யானை பலி... வனத்துறையினர் தீவிர விசாரணை!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரகம் தனக்கடவு பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து அழுகிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக உய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
வனத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலைப் பிரேத பரிசோதனை செய்தனர். யானை இறப்பிற்கான உண்மையான காரணம் உடனடியாகத் தெரியவராததால் அதன் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே யானை இறப்புக்கான காரணங்கள் முழுமையாகத் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நடமாட்டத்தைக் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகத் துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.