இரவு முழுவதும் பிளிறிய யானைகள்... மின்வேலியில் சிக்கி குட்டியானை உட்பட 3 யாணைகள் உயிரிழப்பு!

 

மேற்கு வங்க மாநிலம் பசிம் மேதினிபூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் பசிம் மேதினிபூர் மாவட்டம் சால்போனி பகுதியில் உள்ள தோட்டப் பகுதியில் யானைகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற வனச்சரக அதிகாரிகளும் அலுவலர்களும் ஆய்வு செய்தனர்.

பிரிகாட்டா வனச்சரகத்தையொட்டிய தோட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கியே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் இரண்டு பெரிய யானைகளும், ஒரு குட்டி யானையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

இது குறித்து மாநில வனத்துறை அமைச்சர் மனோஜ் உரான் கூறுகையில், மின்சாரம் தாக்கி மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வயல்களில் யானைகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தடுப்பதற்காக உள்ளூர்வாசிகள் சிலர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.